search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயாங்க் அகர்வால்"

    இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி இரானி கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார். #IraniCup
    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது ஹனுமா விஹாரி தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். கடந்த வருடம் நடைபெற்ற இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக விளையாடிய இவர் 183 ரன்கள் விளாசியிருந்தார்.

    தற்போது இந்த வருடத்திற்கான இரானி கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இதில் ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பா - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    முதலில் விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்தது. தொடக்க பேட்ஸ்மேன் மயாங்க் அகர்வால் 95 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

    3-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி சதம் (114) விளாசினார். பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய விதர்பா கார்னிவர் சதத்தால் (102) 425 ரன்கள் குவித்தது.

    பின்னர் ரெஸ்ட் ஆப் இந்தியா 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடியது. மயாங்க் அகர்வால் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி - ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ரகானே 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி 180 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 52 பந்தில் 61 ரன்கள் அடிக்க ரெஸ்ட் ஆப் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் விதர்பா அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ரெஸ்ட் ஆப் இந்தியா.

    கடந்த வருடம் சதம் விளாசியிருந்த ஹனுமா விஹாரி, இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
    இரானி கோப்பையில் விதர்பாவிற்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. விஹாரி சதம் அடித்தார். #IraniCup
    இரானி கோப்பைக்கான டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இதில் ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பா - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் மயாங்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அன்மோல்ப்ரீத் சிங் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து மயாங்க் அகர்வால் உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மயாங்க் அகர்வால் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையில் சதம் அடித்த ஹனுமா விஹாரி 114 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது ரெஸ்ட் ஆப் இந்தியா 186 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் வந்த ரகானே (13), ஷ்ரேயாஸ் அய்யர் (19), இஷான் கிஷன் (2), கே. கவுதம் (7), டி ஜடேஜா (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ரெஸ்ட் ஆப் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 330 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. விதர்பா அணி சார்பில் சர்வாத், வகாரே தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். 
    ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மயாங்க் அகர்வால், கருண் நாயர் ஏமாற்றம் அளிக்க மணிஷ் பாண்டே, கோபால், ஷரத் ஆட்டத்தில் கர்நாடகா 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற கார்நாடகா பேட்டிங் தேர்வு செய்தது.

    சவுராஷ்டிராவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் சமர்த் (0), மயாங்க் அகர்வால் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த சித்தார்த் 12 ரன்னிலும், கருண் நாயர் 9 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    இதனால் கர்நாடகா 30 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் மணிஷ் பாண்டே உடன் ஷ்ரேயாஸ் கோபால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கர்நாடகாவை சரிவில் இருந்து மீட்டது.

    அணியின் ஸ்கோர் 136 ரன்னாக இருக்கும்போது மணிஷ் பாண்டே 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் கோபால் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    விக்கெட் கீப்பர் ஷரத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கர்நாடகா முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. ஷரத் 74 ரன்களுடனும், மோர் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    சவுராஷ்டிரா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட் நான்கு விக்கெட்டுக்களும், சுழற்பந்து வீச்சாளர் கம்லேஷ் மக்வானா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த விரேந்தர் சேவாக் செய்த சாதனைகளில் பாதியளவு செய்தாலே மகிழ்ச்சிதான் என தொடக்க பேட்ஸ்மேன் மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களான லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் சொதப்பியதால் 27 வயதான மயாங்க் அகர்வால் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 76 ரன்களும், 2-வது இன்னிங்சில் 42 ரன்களும் விளாசினார்.

    சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் 77 ரன்கள் அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கும் மயாங்க் அகர்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அவரை முன்னாள் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன சேவாக் உடன் சிலர் ஒப்பிடுகிறார்கள்.

    இந்நிலையில் சேவாக் செய்த சாதனைகளில் பாதியளவு செய்தாலே மகிழ்ச்சிதான் என்று மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மயாங்க் அகர்வால் கூறுகையில் ‘‘பொதுவாக நான் ஒரு வீரரை மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லை. ஆனால், சேவாக் இந்திய கிரிக்கெட்டின் சிறப்பான வீரர்களில் ஒருவர். நான் களத்தில் இறங்கி என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவேன். என்ன வருகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதுகுறித்து நான் சொல்ல வேண்டுமென்றால், சேவாக் இந்திய அணிக்கு என்ன செய்தாரோ?, அதில் பாதியளவு செய்தாலே மகிழ்ச்சிதான்’’ என்றார்.
    சிட்னி டெஸ்டில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த மயாங்க் அகர்வால், சதத்தை தவறவிட்ட தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க வீரரான மயாங்க் அகர்வால் மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இன்று நடைபெற்ற சிட்னி டெஸ்டிலும் 77 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவர், நாதன் லயன் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இரண்டு போட்டியிலும் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டார். இந்நிலையில் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியம் என்ற மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    இன்றைய முதல்நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு மயாங்க் அகர்வால் இதுகுறித்து கூறுகையில் ‘‘மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போனதால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருந்தால், அது சிறந்த பாடமாக இருக்கும். நாதன் லயன் பந்தை அதிரடியாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. என்னுடைய விக்கெட்டை இழந்ததற்காக மிகவும் ஏமாற்றமடைந்தேன்’’ என்றார்.
    சிட்னி டெஸ்டில் புஜாராவின் அபார சதத்தால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா ஆகியோருக்குப் பதிலாக குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், லாபஸ்சேக்னே ஆகியோர் இடம்பிடித்தனர்.

    மயாங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 9 ரன் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து மயாங்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.


    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹசில்வுட்

    மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் மயாங்க் அகர்வால் 96 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்தபின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 112 பந்தில் 77 ரன்கள் சேர்த்த அவர், நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு மயாங்க் அகர்வால் - புஜாரா ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். புஜாரா சிறப்பாக விளையாடி 134 பந்தில் அரைசதம் அடித்தார். தேனீர் இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 61 ரன்களுடனும், விராட் கோலி 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


    நாதன் லயன்

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஹசில்வுட் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரகானே 18 ரன்னில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் விராட் கோலி, ரகானே ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் விளையாடிய புஜாரா 199 பந்தில் சதமடித்தார். இந்த தொடரில் புஜாராவின் 3-வது சதம் இதுவாகும்.

    புஜாராவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ஹனுமா விஹாரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர்.


    ஹனுமா விஹாரி

    இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை ஓரளவிற்கு தாக்குப்பிடித்து இந்தியா விளையாடி 400 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், இந்த டெஸ்டில் பாதுகாப்பான நிலையை அடைந்துவிடும்.
    மயாங்க் அகர்வாலின் ரஞ்சி கிரிக்கெட்டின் முச்சதத்தை விமர்சித்த ஆஸ்திரேலிய வர்ணனையாளருக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AUSvIND
    மெல்போர்ன் டெஸ்டில் மிகவும் கடினமான சூழலில் இந்திய அறிமுக வீரர் மயாங்க் அகர்வால் முதல் இன்னிங்சில் அரைசதம் விளாசினார். ஆனால் அவர் குறித்து வர்ணனையாளரான ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கெர்ரி ஓ’கீபே இழிவுபடுத்தும் வகையில் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    ‘‘மயாங்க் அகர்வால் ரஞ்சி கிரிக்கெட்டில் முச்சதம் அடித்திருப்பதாக அறிகிறேன். அது ஜலந்தர் ரெயில்வே கேன்டீன் ஊழியர்கள் லெவன் அணிக்கு எதிராக எடுக்கப்பட்டதாக இருக்கும்’’ என்றார். அவரது பேச்சு இந்திய அணி நிர்வாகத்தை கோபத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

    கெர்ரி ஓ’கீபே கருத்து குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும்போது, ‘‘காயப்படுத்தும்படியான ஒரு கருத்து இது. ஆனால் இவ்வாறு சிலர் கூறும்போது ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுகிறது. அது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருக்கிறது. இத்தகைய விமர்சனங்களால் பாதிக்கப்படும்போது களத்தில் சிறப்பாக செயல்படுவதுதான் அதற்கு எல்லாம் சரியான பதிலாக இருக்கும். இது குறித்து அதிகாரபூர்வமாக புகார் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை’’ என்றார்.

    இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறும்போது, ‘‘கெர்ரிக்காக அகர்வாலிடம் ஒரு திட்டம் உள்ளது. அதாவது நீங்கள் (கெர்ரி) கேன்டீன் திறக்கும்போது அகர்வால் அங்கு வந்து காபியை முகர்ந்து பார்ப்பார். அதை இந்திய காபியுடன் ஒப்பிடுவார். உங்களது காபி சிறந்ததா? அல்லது எங்கள் நாட்டின் காபி சிறந்ததா? என்பதை அவர் முடிவு செய்வார்’’ என்று பதிலடி கொடுத்தார்.

    கெர்ரி ஓ’கீபேவை, சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, தனது கருத்துக்கு, கெர்ரி  ஓ’கீபே மன்னிப்பு கேட்டுள்ளார்.
    அறிமுக போட்டியில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆட்டத்தில் கவனம் செலுத்துவது எளிதான காரியம் அல்ல என மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார். #AUSvIND #MayankAgarwal
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் சொதப்பியதால், இந்த போட்டியில் மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மயாங்க் அகர்வாலுக்கு தற்போதுதான் இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அறிமுகம் ஆனது அவரின் அதிர்ஷ்டம்.

    73 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்த மைதானத்தில் கம்பீரமாக இருவரும் களம் இறங்கினார்கள். முதல் போட்டியில், இவ்வளவு பெரிய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுகிறோம் என்ற பதற்றம் இல்லாமல் மயாங்க் அகர்வால் விளையாடினார். விஹாரி 8 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் 66 பந்துகள் சந்தித்து களத்தில் நின்றார். மறுமுனையில் மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடியதால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவரில் 40 ரன்கள் சேர்த்தது.

    95 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்த மயாங்க் அகர்வால் தேனீர் இடைவேளைக்கு சற்று முன் கம்மின்ஸ் பந்தில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மயாங்க் அகர்வால் கூறியதாவது:-

    புகழ் வாய்ந்த அறிமுக போட்டியில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துவது எளிதான காரியம் அல்ல. ஆனால், ரன்கள் குவிக்க இது தேவையானது. நான் என்னுடைய திட்டத்தில் உறுதியாக நின்று, அதை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

    என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அரைசதத்துடன் தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் போட்டி என்பது மிகப்பெரிய இடம். எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு. நான் சீனியர் வீரர்களுடன் வளம்வரும்போது இது மிகப்பெரிய நாள், மிகப்பெரிய வாய்ப்பு என்றார்கள்.

    76 ரன்கள் என்பது மகிழ்ச்சியே. இருந்தாலும் அதிக ரன்கள் எடுத்திருக்கனும். நான் களத்திற்கு சென்று அதிக ரன்கள் அடிக்க வேண்டும், நாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.

    இவ்வாறு மயாங்க் அகர்வால் கூறினார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். #AUSvIND #ViratKohli
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என முடிந்தது. தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 5 மணிக்கு மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், விஹாரி ஆகியோர் களம் இறங்கினர்.

    3-வது டெஸ்டில் விளையாடும் அணி விவரம் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), மயாங்க் அகர்வால், விஹாரி, புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ரி‌ஷப் பந்த், பும்ரா, இஷாந்த் சர்மா, ஜடேஜா, முகமது சமி

    ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட். #AUSvIND #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நாளை காலை 5 மணிக்கு தொடங்குகிறது. #AUSvIND #BoxingDayTest
    மெல்போர்ன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என முடிந்தது. தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இப்போட்டி ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது. முதல் டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2-வது டெஸ்டில் அந்த உத்வேகத்தை தொடர தவறி விட்டது.

    2-வது போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.



    கடந்த 2 டெஸ்ட்டில் இந்தியாவின் தொடக்க ஜோடியான முரளி விஜய் - லோகேஷ் ராகுல் ஆட்டம் மோசமாக இருந்தது. நல்ல தொடக்கம் கொடுக்க தவறினர். ராகுல் பெர்த் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ‘க்ளீன் போல்டு’ ஆனார்.

    இதற்கிடையே நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பெர்த்தில் விளையாடிய உமேஷ் யாதவும் நீக்கப்பட்டுள்ளார்.

    மயாங்க் அகர்வால், ரோகித், ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மயாங்க் அகர்வால் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கிறார். மேலும் பேட்டிங்கில் விராட் கோலி, புஜாரா, ரகானே, ரி‌ஷப் பந்த் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். காயத்தில் இருந்து குணம் அடைந்துள்ள ரோகித் சர்மா 6-வது வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. காயத்தில் இருந்து அஸ்வின் இன்னும் குணம் அடையாததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் உள்ளனர்.

    டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச், கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நீக்கப்பட்டு ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.



    இந்த டெஸ்டில் வெற்றி பெற்று பெற்றால் தொடரை இழக்க வாய்ப்பில்லை என்பதால், இரு அணிகளும் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    3-வது டெஸ்டில் விளையாடும் அணி விவரம் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), மயாங்க் அகர்வால், விஹாரி, புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ரி‌ஷப் பந்த், பும்ரா, இஷாந்த் சர்மா.

    ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட்.
    பயிற்சி ஆட்டத்தின்போது காயம் அடைந்த பிரித்வி ஷா ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் அழைக்கப்பட்டுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் விளாசிய இளம் வீரரான பிரித்வி ஷா, பீல்டிங் செய்யும்போது தவறி கீழே விழுந்தார். அப்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் அடிலெய்டு மற்றும் பெர்த் டெஸ்டில் இடம்பெறவில்லை. வரும் 26-ந்தேதி தொடங்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் ஆன மெல்போர்ன் டெஸ்டில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருந்து பிரித்வி ஷா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் திணறி வரும் நிலையில் இரண்டு பேரில் ஒருவருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், விஹாரி, பார்தீவ் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
    இந்தியா ‘ஏ’ அணி நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்று தொடங்கியது.

    இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பிரித்வி ஷா, முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 62 ரன்களும், முரளி விஜய் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 65 ரன்களும், ஹனுமா விஹாரி 86 ரன்கள் குவித்தனர். கேப்டன் ரகானே 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். விக்கெட் கீப்பர் பட்டேல் சிறப்பாக விளையாடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்தியா ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளது.
    ×